கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும்விதமாக, மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதி இளைஞர், பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் மூலிகைச் சாறு வழங்கிவருகிறார். இதில், தக்காளி, மிளகு, வெங்காயம், மல்லித்தழை, வேப்பிலை, மஞ்சள் தூள் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இளைஞரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இது குறித்து இளைஞர் சிவா கூறும்போது, "கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான் வருகிறது. இந்த மூலிகைச் சாறு, பொதுமக்களின் எதிர்ப்பு சக்திக்காக அளிக்கப்படும் எனது சிறு பங்களிப்புதான்" என்றார்.
இதைப் போலவே, பட்டுக்கோட்டை நகராட்சி சார்பாக, பாதுகாப்பு காரணங்களுக்காக, பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டது. நகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு முறைகளுக்கான செயல்முறை விளக்கத்தை அளித்தனர்.
அதன் பின்னர், பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள், ஆட்டோக்கள், கழிப்பறை, கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி திரவங்கள் தெளிக்கப்பட்டன.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - எஸ்.பி. வேலுமணி