கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 20ஆம் தேதி, லால்பகதூர் சாலை சந்திப்பில் முன்விரோதம் காரணமாக, வினோத் (34) என்ற ரவுடி மீது சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த வினோத்திற்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கும்பகோணத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், கார்த்தி, ஆல்ஃபா குமார் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தாக்குதல் நடத்த பயன்படுத்திய இரண்டு அரிவாள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.