தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்த யோகராஜ், பிரியா தம்பதியினர், இவர்களுக்கு சித்தார்த் (5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சித்தார்த் தன்னுடைய இரண்டரை வயதிலிருந்தே யோகா பயிற்சி, சிலம்பம், வில் வித்தை, டேக்வாண்டோ, பாக்சிங் போன்ற தற்காப்பு கலைகளை ஆர்வமாகவும், விடாமுயற்சியுடன் கற்று வருகிறார்.
மேலும் சித்தார்த் 3 வயதில் இருந்து இதுவரை 3 நோபல் உலக சாதனை செய்து சான்றிதழ் பெற்றுள்ளார். அதில் மூன்று வயதில் முட்டையின் மேல் அர்த்த சமகோண ஆசனத்தில் 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் குங்ஃபூ வில் Non Stop Punches 1 நிமிடத்தில் அதிக முறை செய்து அசத்தியுள்ளார்.
மேலும் தனது 4-வது வயதில் ஒரு நிமிடத்தில் 26 முறை Single Hand Cart wheeler செய்து சாதனை படைத்துள்ளார். மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே இவரது பெற்றோர் மற்றும் யோகா, சிலம்பக்கலை மாஸ்டர் முகமது சபீர் ஆகியோரின் ஆக்கமும், ஊக்கமும் மற்றும் பெரும் முயற்சியால் பள்ளி மாணவன் சித்தார்த் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது.
அந்த யோகா போட்டியில் சித்தார்த் கலந்து கொண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வு பெற்றுள்ளார். இந்த தேர்வின் மூலம் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் உலகளவில் நடைபெறும் யோகா போட்டியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் சித்தார்த் இந்தியாவின் வீரராக போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மேலும் வில் வித்தை போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வுக்காக அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டியிலும் சித்தார்த் பங்கேற்க உள்ளார். தற்போது இதுகுறித்து சித்தார்த்தின் பெற்றோர் யோகராஜ் கூறும்போது, “சித்தார்த்-க்கு இரண்டரை வயதிலிருந்தே யோகா, சிலம்பம், டேக்வாண்டோ, வில் வித்தை ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 30 மெடல்கள் வாங்கியுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு தாய்லாந்துக்கு சித்தார்த் செல்ல உள்ளார். மேலும், அதற்காக தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு சித்தார்த் பெருமையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் வரை சென்று சாதனை படைப்பார்.
யோகா கலையின் மூலம் குழந்தையின் மனநிலை ஒருநிலைப்படுத்தி எளிதில் படிக்க முடிகிறது. யோகா செய்வதற்கு ஏற்றார் போல் வளைந்து கொடுக்கும் வகையில் உடல்வாகும் அமைந்துள்ளது. அதனால் உலகளவில் யோகாவில் சித்தார்த் பேசப்படுவார்" என்றும் பெருமை தெரிவித்தார்.
இந்நிலையில் தாய்லாந்தில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்கும் மாணவன் சித்தார்த் தான் பெற்றுள்ள மெடல்களை மாநகராட்சி மேயர் ராமநாதனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேயர் ராமநாதன் சிறுவனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். யோகா போட்டிக்கு தாய்லாந்து செல்லும் 5 வயது பள்ளி மாணவனுக்கு ஈடிவி பாரத் தமிழ் சார்பில் நாமும் பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.
இதையும் படிங்க: "ஜனநாயக கோவிலை சீர்குலைக்க திட்டம்?" - துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்!