உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை 2,323 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் பரவிவரும் கரோனா தொற்றுநோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டதாக சிவப்பு குறியீடு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்குள்படுத்தப்பட்டுள்ளன.
நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்தத் தடுப்புப் பணிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மிகுந்த சிரமத்துடன் செயலாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அரசின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் எனப் பிரதமர் மோடியும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் நிதியைப் பெற்றுவருகின்றன. அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ அமைப்புகள், கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தினர், ஓய்வுபெற்றவர்கள், கல்வித் துறையினர், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் நிதியளித்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் சாரங்கபாணி மேலவடாகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர் நாகராஜ் (10) தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்துவைத்த சேமிப்பு பணம் மூன்றாயிரம் ரூபாயை நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக அளிக்க முடிவுசெய்துள்ளார்.
அதனை பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் இருவருக்கும் நிவாரண நிதியாக தலா 1500 ரூபாய் என்ற வகையில் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து மணியார்டர் மூலம் அனுப்பியுள்ளார்.
அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்கு பள்ளிக்கூட மாணவர் நாகராஜ் வழங்கியதை பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க : நடமாடும் மருத்துவக் குழுவைத் தொடங்கிவைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!