தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே சோழபுரத்தில் போலி நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியால் படுகொலை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இரு இளைஞர்களான அசோக்ராஜ் மற்றும் முகமது அனஸ் ஆகியோரின் உடல்கள் கடந்த மாதம் 19ஆம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினரால் உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் கேசவமூர்த்தியை தாண்டி இன்னும் பல முகங்கள் சம்மந்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர்களின் முகத்திறையை வெளிக்கொணர காவல்துறை விரும்பாதது போலத் தெரிவதாக பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
எனவே, இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் தமிழக அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும் கொலை குற்றவாளியான கேசவமூர்த்திக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிட வலியுறுத்தியும் சோழபுரம் அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்த போலி நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியை, திருவிடைமருதூர் நீதிமன்றம் மூலம் இரு நாட்கள் விசாரணை நடத்த சோழபுரம் போலீசார் அனுமதி பெற்றனர். அந்த வகையில், தற்போது திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கேசவமூர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் நாளை (டிச. 3) மாலை அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்று திருவிடைமருதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவபழனி உத்தரவிட்டுள்ளார். அதற்குள் கேசவமூர்த்தியிடம் பல்வேறு தகவல்களை பெற போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளா பெண் குழந்தை கடத்தல் வழக்கில் திருப்பம்! தமிழகத்தை சேர்ந்த 2 பெண் உள்பட மூவர் கைது!