கும்பகோணம்: மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி பட்டேல் அரங்கில், மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப தமிழழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் என இரு கூட்டங்களாக நடைபெற்றதில், சாதாரண கூட்டத்தில் 18 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 13 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், "உலகப் பிரசித்தி பெற்ற கும்பகோணத்தில் கொசுக்கள் தொல்லை, இன்றளவும் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்குக் கொசு வலை வழங்கிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் ச.அய்யப்பன் (காங்) நூதன கோரிக்கை வைத்தார். பின்னர், கூட்டப் பொருள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, அதில் முழுமையான விவரம் இல்லாததால், எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதனையடுத்து திமுக மாமன்ற உறுப்பினரான குட்டி தட்சணாமூர்த்தி, மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்கும் முன்பாக, எப்படி எங்களுக்கு எனக் கூறலாம், எனக்கு என மாற்றிக் கேளுங்கள், அல்லது எங்கள் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்குப் புரியவில்லை எனக் கேளுங்கள் எனக் குறுக்கிட்டதால், எனக்கு, எங்களுக்கு என இரு வார்த்தைகளை வைத்தே 15 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டது.
முடிவாக, உறுப்பினர் எனக்கு என மாற்றி விளக்கம் கேட்டார். தொடர்ந்து என்னுடைய கேள்வியை மேயருக்கு வைத்த போதும், என்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் மாமன்ற உறுப்பினர் குட்டி தட்சணாமூர்த்தியே குறுக்கிட்டு பதில் அளிப்பதால், மேயர் மன்னிக்கவும், இனி என்னுடைய கேள்விகளை திமுக மாமன்ற உறுப்பினரிடமே கேட்கிறேன் எனப் பதிலடி தந்தார்.
கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 3 இலவச கழிப்பிடங்கள் இருந்த போதும் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. பிற இரண்டும், மாதக்கணக்காகப் பூட்டியே கிடப்பதாக மாமன்ற உறுப்பினர் பிரதீபா (மதிமுக) குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும் மோதிலால் தெரு ஆஞ்சநேயர் கோயிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை சாலையை அடைத்து தள்ளுவண்டி வணிகர்கள் வணிகம் செய்வதால், நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கும் பெரும் இடையூறாக இருப்பதால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். இந்த சாலையில் பல சமயங்களில் மினி பேருந்துகளும் வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.
இதற்குப் பதிலளித்த ஆணையர் செந்தில் முருகன், "மாநகராட்சி நிதி நிலைமை, ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் அளிக்கவே சிரமமான சூழ்நிலை உள்ளது. ஆதலால், மாநகராட்சி நிர்வாகத்தால் எந்த ஒரு பெரிய பணியையும் எடுத்து செய்ய முடியவில்லை. சிறு சிறு பணிகள் மட்டும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிதி ஆதாரம் கிடைத்ததும், இப்பணிகள் முழுமையாகச் சீரமைக்கப்படும். தெருவோர கடைகள் குறித்து விரைவில், மாமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் புகுந்து கத்தி முனையில் திருடிய அடையாளம் தெரியாத நபர்கள்