தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மேலவிசலூர் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஒன்றரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை கிடைத்துள்ளது. இந்நிலையில், செல்வமணி நாச்சியாா்கோவில் காவல் நிலையத்துக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் பூமா மற்றும் கிராம நிா்வாக அலுவலர் சி.ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை மீட்டு, கும்பகோணம் வட்டாடச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்!
அதனைத் தொடர்ந்து, நாச்சியார்கோயில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து இந்த சிலை எந்த கோயிலுக்கு உரியது? எப்போது திருடப்பட்டது? எப்படி இங்கு கொண்டு வரப்பட்டது? போலீசாருக்கு பயந்து திருடப்பட்ட சிலையை மர்ம நபர்கள் இங்கு வீசிச் சென்றார்களா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஐம்பொன் பெருமாள் சிலையின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய ஏதுவாக, தற்போது கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலவிசலூர் கிராமத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் ஆரம்பமான செவ்வந்தி சீசன்.. பூக்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!