தஞ்சாவூர்: கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பில், அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுகவின் மாநகர செயலாளருமான ராமநாதன் தலமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.
அவர்கள் அனைவரையும் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் மாநகர செயலாளர் ராமநாதனும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், "அதிமுகவை தொடங்கிய புரட்சி தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக என்ற கட்சியே கிடையாது என பேசினார்கள்.
அதை உடைக்கும் விதமாக கரோனா நெருக்கடி காலத்திலும் கூட 4 ஆண்டுகள் சிறப்பான பொற்கால ஆட்சியை தந்தவர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி. அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் போது எவ்வளவு போராட்டம், கட்சியில் இருந்தவர்கள் கூட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு சதி வேலைகளை செய்தார்கள். அதை அனைத்தையும் கடந்து ஆட்சி செய்தார்.
திமுக இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, விளையாடிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் வாரிசான உதயநிதியை விளையாட்டு துறை அமைச்சராக்கியது தான் திமுகவின் சாதனை. உதயநிதி ஸ்டாலின் சந்தானத்தை பற்றி வேண்டுமானால் பேசலாம் சனாதனம் பற்றி பேசலாமா?.
திமுக ஆட்சியில் இன்று தமிழகத்தில் டாஸ்மாக்கும் அரசு மருத்துவமனையும் தான் கூட்டத்தால் நிரம்பி ஹவுஸ் புல்லாகிறது. டாஸ்மாக்கில் குடிக்கிறான், ஆஸ்பத்திரியில் படுக்கிறான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கரப்ஷன் அதிகரித்து வருவதால், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அந்த வெற்றிக் கனியை விண்ணில் இருக்கும் அம்மாவிற்கு காணிக்கையாக செலுத்துவோம்" என்று சக்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத்தின் பிரத்யேக நேர்காணலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!