தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்கு என்று அமைக்கப்பட்ட உலகில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சுவடித் துறை, உலகெங்கிலும் உள்ள தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி, தொகுத்து பாதுகாப்பது, பதிப்பிப்பது, வெளியிடுவது மற்றும் சுவடிகளை மின்படியாக்கி ஆய்வுக்கு உரிய தரவுகளாக மாற்றுவது ஆகியப் பணிகளை முதன்மையாகக் கொண்டுள்ளது.
இந்தத் துறையில் தமிழ், கிரந்தம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பாலிமொழி சுவடிகள் மற்றும் ஆவண சுருணைகள் என 7 ஆயிரத்து 747 சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுவடித்துறை சார்பில் பழங்கால அரிய ஓலைச் சுவடிகளை மின்படியாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 4 ஆயிரம் தமிழ்ச் சுவடிகளுக்கான விளக்க அட்டவணைகள் எட்டுத் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. கணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச் சுவடிகள் அட்டவணை என்ற பெயரில் தமிழில் ஐந்து தொகுதிகள், ஆங்கிலத்தில் ஐந்து தொகுதிகள் (Computerised International Catalogue of Tamil Palmleaf Manuscripts, vol 1 - 5) என பத்து தொகுதிகளாக மொத்தம் 21 ஆயிரத்து 973 ஓலைச் சுவடிகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
லண்டன் பிரிட்டிஷ் நூலக Endangered Archive Programe (EAP) திட்டத்தின் மூலம் தமிழ்ச் சுவடிகளை மின்படியாக்கம் செய்வதற்கு 51 ஆயிரத்து 40 பவுண்ட் நிதி வழங்கி உள்ளது. அதேபோல், டெல்லியில் உள்ள தேசிய சுவடிகள் இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறையில் சுவடிகள் பாதுகாப்பு மையம் ஒன்றை உருவாக்கி, ஆண்டுதோறும் 7 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் 12 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகிறது.
ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் முறை: மின்படியாக்கம் செய்யும் பணிகளாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஓலைச்சுவடிகளைப் பெற்று, நுண்கிருமி நீக்கப்பேழையில் வைத்து சுத்தம் செய்து, அனைத்து சுவடிகளுக்கும் சிற்றநல்லா ஆயில் வைத்து, எழுத்து தெரியாத சுவடிகளுக்கு கருப்பு மை பூசப்பட்டு, பிறகு வரிசை கிரமமாக அட்டவணை செய்து, சுவடிகள் மின்மயமாக்கும் பணிகள் நடைபெறும்.
அதன் பின்னர் இவை அனைத்தும் கணினியில் சரிபார்க்கப்படுகிறது. இந்தப் பணி முடிவுற்றதும் நூலகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. மேலும், ஓலைச் சுவடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்க வால் மிளகு, பட்டை, கிராம்பு, பச்சை கற்பூரம், வசம்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகிய மணப்பொருள் அடங்கிய முடிச்சுப் பைகள் வைக்கப்படுகிறது.
மேலும், இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் கூறுகையில், “சுவடித் துறை சார்பில் தமிழ் ஓலைச் சுவடிகளைக் கண்டறிந்து, அதைப் பாதுகாத்து கணினி மயமாக்கி, அதில் உள்ள செய்திகளைப் பல்வேறு பொது நூலகங்களில் பங்கு கொள்ளச் செய்வதை அடிப்படை நோக்கமாக சுவடித் துறை கொண்டுள்ளது.
ஓலைச் சுருணைகள் சேகரிப்பு: இதுவரை 4 ஆயிரம் ஓலைச் சுவடிகள் மின்படியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தேசியச் சுவடிகள் பாதுகாப்பு இயக்ககம் மூலம் 12 லட்சம் ரூபாய் நிதியுதவி பெறப்பட்டு ஓலைச் சுவடிகள் மின்படியாக்கம் மற்றும் சுவடிகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை முறையாக சுத்தம் செய்து பாதுகாப்பது ஆகியப் பணிகள் நடைபெறுகிறது.
2009 - 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் பகுதி II திட்டத்தின் கீழ் ஓலைச் சுவடித் துறையில் இருக்கின்ற தமிழ், இலக்கணம், இலக்கியம், கலை மற்றும் பண்பாடு தொடர்பான ஓலைச் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் ஆகியவை கணினிப் படியாக்கம் செய்யும் பணி 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ளது.
இங்கு பாதுகாக்கப்படும் ஓலைச் சுவடிகள் மூலமாக பல்வேறு விதமான பழமையான செய்திகளை தெரிந்து கொள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக இத்துறைக்கு மாணவர்கள் வருகின்றனர். ஓலைச் சுவடிகளில் உள்ள இலக்கியம், இலக்கணம், தத்துவ நூல்கள், ஜோதிட நூல்கள் மற்றும் மருத்துவ நூல்கள் போன்ற அனைத்து வகையான செய்திகளையும் ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டத்தின் வாயிலாக ஆய்வு செய்து வெளி உலகத்திற்கு கொண்டு வருகின்றனர்.
மேலும், வருவாய் பற்றிய செய்திக்கான, சுமார் 200 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கக் கூடிய நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக வருவாய் ஆவணங்கள் ஓலை சுருணைகளாக இங்கு சேகரித்து பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை மின்படியாக்கம் செய்வதற்கும், அவற்றில் உள்ள செய்திகளை தொகுத்து வழங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார். இந்தத் திட்டப் பணிகளை சுவடித் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோவைமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அரிய வகை ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு