தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த 1948ஆம் ஆண்டு, மார்ச் 28ஆம் தேதி பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் பிறந்தார். அவ்வூரிலேயே வளர்ந்து, வசித்து வந்த துரைக்கண்ணு, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ.இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து, தனது படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் அவர் பணிபுரிந்தார். பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் இணைந்த துரைக்கண்ணு, பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை கூடத் தலைவராகவும் பதவி வகித்தார்.
கடந்த 2006, 2011, 2016 என மூன்று தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துரைக்கண்ணு. 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சராக்கபட்டவர் துரைக்கண்ணு.
தஞ்சை, வடக்கு மாவட்ட அதிமுக செயலராகவும் அவர் இருந்து வந்தார். துரைக்கண்ணுவின் மனைவி பெயர் பானுமதி. இவர்களது மூத்த மகன் சிவபாண்டியனும் வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகனான ஐய்யப்பன் (எ) சண்முகப்பிரபு, அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக உள்ளார்.