தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நேற்று முன்தினம் 14ஆம் தேதி வியாழக்கிழமை, கும்பகோணம் ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (25), கொரநாட்டுக் கருப்பூரை சேர்ந்த அன்பரசன் (28) மற்றும் திருவிடைமருதூர் வட்டம் முள்ளங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) ஆகிய மூவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.
அந்த மூவரும் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். இந்நிலையில், தற்போது திருப்பனந்தாள் சிக்கல் நாயகன் பேட்டை பகுதியை சேர்ந்த கனிமொழி (20), அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த வினோத் (22) ஆகிய இருவருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மேலும் மூவருக்கு டைபாய்டு காய்ச்சலும் உறுதியாகியுள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காய்ச்சல் வார்டில், தற்போது 7 ஆண்கள், 12 பெண்களும் தீவிர சிகிச்சை பிரிவில், 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனை நிர்வாகம், முன்னச்சரிக்கை நடவடிக்கையாக நூறு படுக்கைகள் கொண்டு டெங்கு சிறப்பு வார்டு ஒன்று தயார் நிலையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 300 பேர் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு, படுக்கை வசதி அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஏற்கனவே 5 குழந்தைகள்; 6-ஆவதாக பிறந்த குழந்தையை கொன்ற கர்ப்பிணி.. தஞ்சையில் நிகழ்ந்தது என்ன?