தஞ்சாவூர் : மாயனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட, கடந்த மாதம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதன்படி, உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வரும் தண்ணீர் ஏரி, குளங்கள் நிரம்ப போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்கோரி, இன்று (அக்.9) உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிபிஎம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வியாகுலதாஸ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் தாசில்தார் சிவகுமார்,திருவையாறு துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.சித்திரவேல், திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் வாளவந்தான் கோட்டை ஏரியை 80 பாய்ண்டுக்கு நீரை உயர்த்தி, 10 ஆம் தேதி காலையில் தண்ணீர் திறந்து விடுவதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : இனி பயோமெட்ரிக் முறை இல்லாவிட்டாலும் ரேஷனில் பொருள்கள் வாங்க முடியும்...!