தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் கடந்த ஐந்து தினங்கள் முன்பு சென்னையில் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்த கொண்ட பின்னர், நேற்று(ஜூன்13) காலை தனது கணவருடன் தன் சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
விருந்து கொடுப்பதாக வரவழைக்கப்பட்ட இருவரும் வீடு திரும்பும் வேளையில், கொடூரமாக ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து சோழபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியான சரண்யாவின் மூத்த சகோதரர் சக்திவேல் மற்றும் சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரையும் இரவோடு இரவாக திருவிடைமருதூர் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். திருவிடைமருதூர் காவல் துறை பாதுகாப்புடன் சக்திவேல், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சிவபழனி, குற்றம்சாட்டப்பட்ட சக்திவேல் மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய இருவரையும் வருகின்ற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: கொலை வழக்கு கைவிடப்பட்டதாக நினைத்து சொந்த ஊர் திரும்பியவர் கைது