மேட்டூர் அணையிலிருந்து இந்தாண்டு பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 16ஆம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில், பல இடங்களில் தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகேயுள்ள காவிரிக்கரையில் இருந்து பிரியும் திருபுவனம் வாய்க்காலில் ஒரு சொட்டு நீர் கூட செல்ல முடியாத அவலமே நீடிக்கிறது.
கல்லணை திறக்கப்பட்டு இரு வார காலம் கடந்த பின்பும், நகரிலுள்ள எந்த வாய்க்காலிற்கும், குறிப்பாக தேப்பெருமாநல்லூர், உள்ளுர், பழவாத்தாக்கட்டளை, பெரும்பாண்டி , திருபுவனம் என வாய்க்கால் மற்றும் குளத்திற்கு தண்ணீர் சென்று சேரவில்லை.
இதனால் காவிரி நீர், பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஆறு, வாய்க்கால், குளம் போன்றவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அனைத்து நீர்வழித் தடங்களையும் சீரமைத்து அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் கிடைக்க வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.