தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் ரயில் நிலையத்தில், மைசூரூ-மயிலாடுதுறை விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து இன்று முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் (16231 மற்றும் 16232) நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கான விழா பாபநாசம் ரயில் நிலையத்தில் இன்று மாலை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தலைமையிலும், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்திநர்களாக மத்திய தகவல் மற்றும் தொழிற்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். விழாவில் கலந்து கொண்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய ரயில்வேத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. பாரத தேசத்தில் அதிவேகமாக முன்னேறும் துறையாக ரயில்வே துறை விளங்குகிறது. விரைவாக உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் ரயில்வேத்துறை முக்கிய பங்கு ஆற்றுகிறது. தமிழ்நாட்டில் ஐந்து முக்கிய ரயில் நிலையங்கள் ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ரயில்வேத் துறைக்கு மத்திய அரசு ரூபாய் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஐந்து முக்கிய ரயில் நிலையங்களான ராமேஸ்வரம் 113 கோடி ரூபாய், மதுரை 413 கோடி ரூபாய், காட்பாடி 465 கோடி ரூபாய், சென்னை எழும்பூர் 842 கோடி ரூபாய் மற்றும் கன்னியாகுமரி 67 கோடி ரூபாய் என மொத்தம் ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் இந்த ரயில் நிலையங்கள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்படவுள்ளது. இது தவிர, கும்பகோணம், தஞ்சாவூர் உட்பட தமிழ்நாட்டில் உள்ள மேலும் 73 ரயில் நிலையங்களையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து எல்.முருகன், எஸ். கல்யாணசுந்தரம் எம்பி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகனும் ஒருசேர பச்சை கொடியசைக்க, அந்த ரயிலை லோக்லோ பைலட் சுபின் மற்றும் கார்த்தி இயக்க, அவர்களுக்கு மேலாளரும் (கார்டு) காமேஸ்வரன் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபநாசம் ரயில் நிலையத்தில் இவ்விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மைசூரு விரைவு ரயில் சுமார் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு பாபநாசம் ரயில் நிலையத்தில் இருந்து பயணம் தொடங்கியது.
எல். முருகனை வரவேற்க ஏராளமான பாஜகவினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரத்தை வரவேற்க ஏராளமான திமுகவினர் கட்சி கொடிகளுடன் திரண்டனர். அவ்வப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க, வருங்கால இந்தியா ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும், நாளைய முதலமைச்சர் அண்ணாமலை வாழ்க, பிரதமர் நரேந்திரமோடி வாழ்க என பாஜகவினரும் போட்டிப் போட்டுக் கட்சிக் கொடிகளை ஆட்டியபடி, முழக்கங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு : வைகோ கண்டனம் !