தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படுகிறது. தற்போது, இந்த குறுவை நெல், தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 22ஆக உயர்ந்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், நெல்லின் ஈரப்பதத்தை ஆராய மத்திய குழுவினர் தமிழ்நாட்டு வந்தனர். அவர்கள், தஞ்சாவூரில் குறுவாடிப்பட்டி, குளிச்சப்பட்டு, பனையக் கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்கின்றனர்.
இது குறித்து பேசிய மத்திய குழு தலைவர் யாதேந்திர ஜெயின், "தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இருந்து நெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை மண்டல இந்திய உணவு கழகத்திடம் ஒப்படைக்கப்படும். அந்த முடிவுகளின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, அக்டோபர் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.