தஞ்சாவூர்: கும்பகோணத்தின் மையப்பகுதியான உச்சிபிள்ளையார் கோயில் பகுதியில், எரவாஞ்சேரியை சேர்ந்த மாதவன் என்பவர் நேற்று (டிசம்பர் 18) தனது ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் (Hero Splendor i Smart) இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளார். பொருள்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, தனது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என திடுக்கிட்டு, அந்தப் பகுதி முழுவதும் சென்று தேடியுள்ளார்.
எங்கு தேடியும் வாகனம் கிடைக்காததால், அந்தப் பகுதியில் உள்ள சில கடைகளின் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தார். அதில், இருசக்கர வாகனத்தை டிப்டாப்பாக உடை அணிந்த இளைஞர் ஒருவர் தஞ்சை செல்லும் முக்கிய சாலையில் தள்ளிக் கொண்டு போவது பதிவாகி இருந்தது.
உடனடியாக இந்த சிசிடிவி காட்சியினை தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட மாதவன், “எனது இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவரின் வீடியோவை பதிவிட்டுள்ளேன். தாங்கள் எங்கேயும் தனது வாகனத்தையும், சம்மந்தப்பட்ட நபரையும் பார்த்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” எனவும் பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட இளைஞரைத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதியில் நடந்த இந்த இருசக்கர வாகனத்திருட்டு கும்பகோணம் மாநகர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடிச்செல்லும் நபரின் காட்சிப்பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோவை திருடிச் சென்ற இளைஞர்கள் - சிசிடிவி மூலம் விசாரணை