தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே பூவத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும், தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்வதை பார்த்து ஏழை எளிய மாணவர்களின் ஏக்கத்தைப் போக்கவும், முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் பூவத்தூர் கல்வி வளர்ச்சிக் குழுமம் இணைந்து பள்ளிக்கு சுமார் 13 லட்சம் மதிப்பிலான பேருந்தை இலவசமாக வழங்கியுள்ளனர்.
இதன்மூலம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பேருந்தில் செல்வதைப் பார்க்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் இப்பகுதியில் உரிய பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பல கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது.
இதனால் பெற்றோர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பயப்படக்கூடிய சூழல் உள்ளது. இதனை போக்குவதற்காகவும் தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக அரசுப் பள்ளிக்கு வாகனம் வாங்கி, பள்ளியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறுகையில், ’இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயந்து வந்தனர். இதனால் தங்களின் கல்வி பாதித்தது, தற்போது இந்தப் பள்ளி வாகனம் மூலம் நாங்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்கிறோம். மேலும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதால் எங்களுக்கு பாடம் படிக்க எளிதாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் என்ன பிரச்சனை இருந்தால் திமுகவிற்கு என்ன?: தமாகா யுவராஜா