தஞ்சாவூர்: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகரத்தை கிளப்பி வருகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுக் குழு மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அதிமுகவில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். என அணிகள் பிரிந்து தங்களுக்குள் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்து வருகின்றனர்.
ஈ.பி.எஸ். தரப்பை ஆதரிக்கும் விதமாக, ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்திற்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து, மத்திய அரசு இரு அணிகளிடையே பிரச்னையை மேலும் பூதாகரமாக்கியது.
அதேநேரம் மத்திய அரசின் இரு வேறு துறைகளில் இருந்து ஈ.பி.எஸ்.க்கு இடைக்கால பொதுச் செயலாளர் என கடிதம் சென்ற நிலையில், மத்திய அரசே அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இந்நிகழ்வு ஓ.பி.எஸ். தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த முறை தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கடிதம் அனுப்பப்பட்டதும், ஓ.பி.எஸ். தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. நிர்வாகிகளிடையே ஓ.பி.எஸ். முறையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என மீண்டும் ஒரு கடிதம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்று உள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி அணி அதிமுக நிர்வாகிகள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இப்போக்கு ஈ.பி.எஸ். தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ். அணியின் கட்சி அலுவலகத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை கட்சி நிர்வாகிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தொண்டர்கள் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், "இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி, மாநில தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். என கடிதம் அனுப்பி உள்ளது.
அதை ஈ.பி.எஸ் தரப்பு திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. கடிதத்தை திருப்பி அனுப்பினால் ஈ.பி.எஸ். தரப்பினர் அதிமுகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கலாம். அதிமுகவில் இருப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை’’ என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு