தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டுக்கோட்டை நகரத்தில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். பட்டுக்கோட்டை பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புதுரோட்டில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர், திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அனுமதியோடு, பட்டுக்கோட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுடன் சிரித்து பேசியதோடு, பல குரல்களில் பேசியும் மகிழ்வித்தனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன அழுத்தம் குறைந்து இயல்பு நிலையை அடைவதற்கு இது ஒரு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என ரோபோ சங்கர் கூறினார்.
உலகமே கரோனா வைரஸை பார்த்து பயப்படும் நிலையில் தொற்றால் பாதித்தவர்களை தனிமைப்படுத்தலாமே தவிர அவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. எனவே அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து சந்தோஷப்படுத்தி வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்ததாக ரோபோ சங்கர் தெரிவித்தார்.