தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான Craniofacial Anomaly பிரச்னையால் 10 வயது சிறுவன் ஒருவன் அவதியுற்று வந்தார். இந்த நிலையில், இந்த சிறுவனுக்கு அதை அகற்றுவதற்கான ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்துள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்ட நிதியுதவியின் கீழ், இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. அரியலூர் மாவட்டம், T.பலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து - சத்யா தம்பதியினரின் மகன் பிரதீப் என்ற இச்சிறுவனுக்கு அவனது பிறப்பிலிருந்தே வலது முன்னந்தலைப் பகுதியில் இருந்த வீக்கத்திலிருந்து சளி வெளியேற்றுவதில் பிரச்னை இருந்து வந்துள்ளது.
பல ஆண்டுகளாக இதனால், கடும் சிரமப்பட்ட இந்த இளம் நோயாளியைப் பரிசோதித்த தனியார் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான மருத்துவர் அருண்குமார் இந்த சிறுவனின் முகத்தின் வலது முன்புறப் பகுதியில் PL என அழைக்கப்படும் Proboscis Lateralis இருப்பதைக் கண்டறிந்தார்.
இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'PL என்பது எலும்பு வளர்ச்சி உண்மையால் ஏற்படும் பாதிப்பு நிலை. இந்தப் பாதிப்பு 1,00,000 நபர்களில், ஒரு நபருக்கும் குறைவாகவே இது நிகழ்வதாக அறியப்படுவதால், இதுவொரு மிக அரிதான பாதிப்பு ஆகும். பெரும்பாலும் இவை முகத்தின் மையக்கோட்டு பகுதியில் அமைந்திருக்கும். ஆனால், மிக அரிதான நேரங்களில் மையக்கோட்டுக்கு அடுத்து அவைகள் இருக்கக்கூடும்.
இந்த சிறுவனைப் பொறுத்தவரை, அவனது முகத்தின் பாஸிஃபிரண்ட்டல் என்ற பகுதியோடு இது இணைந்திருந்தது. “Proboscises-இன் அடிப்பகுதியில் வளர்ந்திருந்த இதனை முழுமையாக வெட்டி அகற்றுவதற்காக சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை இச்சிறுவனுக்கு செய்யப்பட்டது. இந்த நிலையில், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் (ENT), குழந்தைகளுக்கான மயக்கவியல் நிபுணர், குழந்தை நல மருத்துவர் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழு மேற்கண்ட இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொண்டன'' என்றார்.
சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுவனின் உடல்நிலை முன்னேற்றம் கண்டதால் குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் இது குறித்து மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் காந்திராஜ் கூறும் போது, ''பொது உணர்விழப்பு மருந்தின் கீழ் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை பெரும் சவாலானதாக இருந்தது'' என்று கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழும், சிறுவனின் பெற்றோர்களிடமிருந்து தொகை ஏதும் பெற்று கொள்ளாமலும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மருத்துவர்கள் ஹரிமாணிக்கம், ஐசக் ரிச்சர்ட்ஸ், பிரவீன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, இத்தகைய சிக்கலான மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து 10 வயது சிறுவனின் துணை மூக்கை (Accessory nose) வெற்றிகரமாக அகற்றிய தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: கரோனா தொற்றை சீனா பரப்பவில்லை: அமெரிக்காவின் மற்றொரு புலனாய்வுக் குழுவின் முரணான கருத்து!