ETV Bharat / state

Aadi Perukku: தஞ்சையில் ஆடிப்பெருக்கு கோலாகலம்.. காவிரியில் புனித நீராடிய மக்கள் தக்காளி விலை குறைய வேண்டுதல்! - மேலக்காவேரி படித்துறை

தஞ்சாவூர் காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில் புனித நீராடி உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்திட பொதுமக்கள் சிறப்பு பிராத்தனை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தஞ்சை காவிரி ஆற்றில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா
தஞ்சை காவிரி ஆற்றில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா
author img

By

Published : Aug 3, 2023, 1:07 PM IST

தஞ்சை காவிரி ஆற்றில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா

தஞ்சாவூர்: தமிழ் மாதத்தில் ஆடி மாதம் என்பது தெய்வீக மாதமாக போற்றப்படுகிறது. இம்மாதத்தில் வரும் பதினெட்டாம் நாள் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீருக்கு மக்கள் மலர் தூவி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். தமிழர்கள் கொண்டாடி மகிழும் ஆடி 18 அல்லது ஆடிப்பெருக்கு விழாவில் தங்களுக்கு பஞ்சமில்லாத வாழ்வு தர வேண்டும் என இறைவனை வேண்டி நீருக்காக பூஜை நடத்தப்படும் நாள் தான் இந்த ஆடிப்பெருக்கு விழா என்று கூறுகின்றனர்.

புதியதாக திருமணமாகி தல ஆடி கொண்டாடுபவர்களுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் இந்த தினத்தில் தாலி கயிற்றை பிரித்து புதிதாக மாற்றும் நிகழ்ச்சியும் கொண்டாடப்படுகிறது. இதனால் அவர்கள் கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கடந்த ஆண்டை போல இவ்வாண்டு, மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதனால் தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காவிரி மற்றும் அரசலாற்றங் கரைகளில் உள்ள பாலக்கரை டபீர் படித்துறை, பகவத் படித்துறை, சக்கரப் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சோலையப்பன் தெரு இராஜேந்திரன் படித்துறை, அண்ணலக்ரஹாரம் படித்துறை, சுவாமிமலை படித்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

மேலும் ஏராளமானோர் காலை முதல் வாழை இலை போட்டு விளக்கேற்றி சப்பரத்தட்டி வைத்து பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், விலாம்பழம், பேரிக்காய், நாவல் பழம் உள்ளிட்ட பல்வகை பழங்களுடன், காதோலை கருகமணி, ஊறவைத்த அரிசியில் எள்ளு, வெல்லம் கலந்தும் வைத்தும், மங்கல பொருட்களான மஞ்சள் நூல் கயிறு, தாலி கயிறு, சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

மேலும் கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் கைகூடவும், சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப மேன்மைக்காகவும் வழிபாடு செய்தனர். புதுமண தம்பதியினர் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தாலிப் பெருக்கி கட்டிக் கொண்டும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் குங்குமம் பூசி, மஞ்சளில் நனைத்த நூல்களை கட்டியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பூஜையின் நிறைவாக, பெண்கள் ஒருவருக்கு ஒருவர், மஞ்சள் நூல்களை கழுத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி அணிவித்துக் கொண்டும், ஆண்களின் வலது கை மணி கட்டுகளில் கட்டிக் கொண்டும், இப்பண்டிகையினை வழக்கமான உற்சாகம் குறையாமல் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் காய்கறிகள் விலை குறிப்பாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதால் விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தர வேண்டி பிராத்தனை செய்வதாக மக்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: வந்தியதேவன் கண்டு ரசித்த ஆடிப்பெருக்கு விழா; காவிரியில் கோலாகல கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.