தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில், தாராசுரம் ஐயிராவதீஸ்வரர் திருக்கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் போன்ற கோயில்கள் சூழ்ந்த வடிவமைப்பைக் கொண்டது.
இத்தகைய கும்பகோணத்தில் உள்ள துக்காச்சி கிராமத்தில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் விக்கிரம சோழரால் திருப்பணி செய்விக்கப்பட்ட சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தகைய பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோயிலில் 5 முக்கிய கல்வெட்டுக்கள் அமைந்துள்ளது.
அதில் ஒன்றில் இத்தலம், தென்காளஹத்தி (தென்னக காளாஸ்திரி) சுவாமி இடர்களையும் நாதர் என்றும், சிவனைப் பூஜித்து துர்க்கை பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்ததால், இது துர்க்கை ஆட்சி செய்யும் இடம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த துர்க்கை ஆட்சி என்பது நாளடைவில் துக்காச்சி என மறுவி அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் ஆதி சரபமூர்த்தி தனி சன்னதி கொண்டும், அதே போல் தெற்கு நோக்கி துர்க்கை அம்மன் தனி சன்னதி கொண்டும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள சரபமூர்த்தி, திருபுவனம் சரபேஸ்வரர் மற்றும் தாராசுரம் சரபேஸ்வரர்களுக்கும் முன் அருள்பாலித்த பெருமானாக போற்றப்படுகிறார்.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயில், ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலுக்கு இணை கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கற்குவியலாகக் கிடந்ததால், இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமலேயே இருந்து வந்துள்ளது.
அதையடுத்து பக்தர்களுடைய பெரும் முயற்சியினாலும், கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் வசந்தகுமார், தமயேந்தி தம்பதியினரின் பெரும் முயற்சியினாலும், ரூபாய் நாலரை கோடி மதிப்பீட்டில் இக்கோயில் முழுவதுமாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அதன் திருப்பணிகள் நிறைவு பெற்றது.
அதைத் தொடர்ந்து, கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின. கடந்த செப்.1ம் தேதி வெள்ளிக்கிழமை, முதல் கால யாக பூஜைகள் தொடங்கியதைத் தொடர்ந்து இன்று 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4ம் கால யாக பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து கோபுர ஆர்த்தியும் செய்து, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து புறப்பாடானது விமான கோபுர கலசங்களைச் சென்றடைந்து, அங்கு விமான கலசங்களுக்கு மாலை அணிவித்து, மலர்களால் பூஜைகள் செய்விக்கப்பட்ட பிறகு, சுவாமி கோபுரம், அம்பாள் கோபுரம், ராஜகோபுரம் என அனைத்து விமான கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே, தற்போது இஸ்லாமியப் பெருமக்கள் அதிகம் வசிக்கும் இடமாக துக்காச்சி விளங்கி வரும் நிலையில், துக்காச்சி முஸ்லீம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று கோயிலின் முன் பிளக்ஸ் மற்றும் பேனர் வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கடும் வெயிலில் கும்பாபிஷேகம் காண வந்த அனைவருக்கும், மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் குளிர்பானம் (ரோஸ்மில்க்) வழங்கி, அனைவரது மனங்களையும் குளிரச்செய்தனர். இதனால், இஸ்லாமியச் சகோதரர்களின் மதங்களைக் கடந்த மனித நேய மாண்பைக் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் நன்றியோடு, பாராட்டி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!