தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் காளிராஜ்(22). பொறியியல் பட்டதாரியான இவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலையில் முடுக்குப்பத்து பகுதியில் உள்ள அவரது தோப்பு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேகமாக வீசிய காற்றினால் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காத காளிராஜ் அதன் மீது மிதித்து விட்டார்.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அச்சன்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காளிராஜின் உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் திரண்டனர். காளிராஜ் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "மின்சாரக் கம்பிகள் தாழ்வாக செல்வது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து மின்வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காளிராஜ் மரணத்திற்கு மின்வாரியத்தின் அலட்சியப்போக்கே காரணம் ஆதலால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், அவரது உயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்" என்றனர். அவர்களிடம் காவல்துறையினரும், வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்: யார் இந்த அங்கொடா லொக்கா?