தென்காசி மாவட்டம் சிவகிரி வ.ஊ.சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அஜித் (22). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பும் போது சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் எந்தவித காரணமும் இன்றி அஜித்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஜித் வீட்டிற்கு சென்று எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங்கிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அஜித்தின் தாயார் கூறுகையில், "காவல் ஆய்வாளர் தன் மகனை எவ்வித காரணமுமின்றி தகாத வார்த்தையால் திட்டி அடித்துள்ளார். இதனால் மனமுடைந்து விஷம் அருந்திய மகன் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி மருத்துவமனையில் உள்ளான். எனவே, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சிவகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.