தென்காசி: Video: ஆலங்குளம் அடுத்துள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹோட்டல் மாஸ்டராக ஆண்டிபட்டியைச் சேர்ந்த தர்மர் மகன் ஆறுமுகம் பணியாற்றி வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசிங் என்பவரது மகன் வினோத்குமார் (23) மது அருந்திவிட்டு போதையில் ஹோட்டலுக்கு வந்து ஆறுமுகத்திடம் தனக்கு ஃபிரைட் ரைஸ் வழங்க வேண்டுமென தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்கு ஆறுமுகம் பணம் கொடுத்தால் உடனே ஃபிரைட் ரைஸ் தருவதாகக் கூறியுள்ளார்.
தன்னிடம் பணம் கேட்பதா என கோபமடைந்த வினோத்குமார் கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக கடை உரிமையாளர் முருகன் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார். போதையில் வெளியில் சென்ற வினோத் குமார் சென்டரிங் கட்டையை எடுத்துவந்து ஆறுமுகத்தின் தலையில் பின்னால் நின்று பலமாகத் தாக்கியுள்ளார்.
கடையில் இருந்தவர்கள் அவரைப் பிடிப்பதற்குள் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கடையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹோட்டல் மாஸ்டரை கட்டையால் தாக்கும் வீடியோ கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது தெரியவந்தது. மேலும் மாஸ்டரை கட்டையால் தாக்கியதில் ஹோட்டலில் இருந்தப் பொருட்களும் சேதமடைந்தன.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் முருகன் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வடிவேலு காமெடி போல அடி வாங்காமலேயே வாக்குமூலம் அளித்த மதுப்பிரியர்களுக்குச் சிறை!