தென்காசி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன்-பேபி ரம்யா தம்பதியினர். இவர்களுக்கு உதயா (6), அசார் (4) என இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேபி ரம்யா பிரிந்து தேவிப்பட்டினம் பகுதியில் பாண்டி என்பவரின் வீட்டில், வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். மேலும் ஆலை வேலைக்குச் சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தன்னைவிட்டுப் பிரிந்து வாழும் மனைவி பேபி ரம்யாவை சமாதானம் செய்து, அவரை தனது வீட்டிற்குச் சமீபத்தில் அழைத்துச் சென்றார் மாரியப்பன். இதனையடுத்து கணவர் வீட்டிற்குச் சென்ற பேபி ரம்யா செல்போனில் அடிக்கடி வேறு நபருடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் மாரியப்பனுக்குத் தெரியவர மீண்டும் இருவருக்கும் பிரச்சினை எழுந்துள்ளது.
இந்நிலையில் பேபி ரம்யா நேற்று (ஜூன் 24) கணவர் கொத்தனார் வேலைக்குச் சென்றவுடன்
தனது குழந்தைகளைக் கணவர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும், பேபி ரம்யா தேவிப்பட்டினம் கிராமத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்து மாரியப்பனுக்குத் தெரியவர உடனே தனது மனைவியை அழைத்துவர அக்கிராமத்திற்குச் சென்றார்.
ஆனால் பேபி ரம்யா அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மாரியப்பன் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால், பேபி ரம்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பேபி ரம்யா உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிவகிரி காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் மாரியப்பனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் போராட்டம்