தென்காசி: மரஆலை தொழிலதிபர் வீட்டில் அவரது மனைவியை கட்டிபோட்டு 80 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் நகர் பகுதியில் உள்ள முக்கிய பிரதான சாலையான தங்கப்பாண்டியன் சிக்னல் அருகே ஜெயபால் (63) என்பவர்க்கு சொந்தமான வீடு உள்ளது. இவரது மனைவி விஜயலட்சுமி, இவர்களுக்கு திருமணமான இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தென்காசியில் மரஆலை தொழில் செய்து வரும் ஜெயபால், தொழில் நிமித்தமாக செப்டம்பர் 8ஆம் தேதி வெளியூர் சென்ற நிலையில், அவரது மனைவி விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மதிய நேரத்தில் அடையாளம் நபர்கள் வீட்டில் நுழைந்து விஜலட்சுமியை மிரட்டியதோடு, அவரை கட்டிப்போட்டு திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் வீட்டில் இருந்த 80 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஜெயபால் வீட்டில் வேலை செய்யக்கூடிய பணிப்பெண் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி கட்டிப்போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு சிசிடிவி இல்லாத நிலையில் அப்பகுதியில் சிக்னல் வழியாக கடந்து சென்ற வாகனத்தை கண்காணித்து அதில் பல்சர் பைக்கில் ஒரு நபர், அவரது பின்னாடி பர்தா அணிந்து சென்ற ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த வாகன எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.