தென்காசி: புளியங்குடி அருகே உள்ள அரியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் கல்குவாரிக்கு சொகுசு காரில் வலம் வந்து செய்தியாளர் என கூறி பணம் பறிக்க முயன்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் வினோத்குமார் (31), லோகநாதன் மகன் பிரபுராஜன் (38), காசிராஜன் மகன் சவுந்தரபாண்டி (21) ஆகிய மூவரும் புளியங்குடி அருகே உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு காரை நிறுத்திவிட்டு கல்குவாரி முதலாளியிடம் பேச வேண்டும் என கூறியதாகத் தெரிகிறது.
இதை அங்கு பணி செய்யும் தொழிலாளர்களிடம் தெரிவித்து உள்ளனர். அப்போது தாங்கள் மூவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தில் பணி செய்வதாகவும், உங்கள் குவாரியில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்றும், இதனை செய்தியாக வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தங்களுக்குப் பணம் தர வேண்டும் எனவும், இல்லை என்றால் செய்தியை வெளியிட உள்ளோம் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே மதம் என சொல்லும் மோடி ஒரே சாதி என கூறுவாரா? - கே.எஸ்.அழகிரி காட்டம்
அதனைத் தொடர்ந்து இவர்கள் முன்னுக்குப் பின்னாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த கல்குவாரி ஊழியர்கள், உடனடியாக புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது முன்னுக்குப் பின்னாக பேசியதில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மூவரும் போலியான செய்தியாளர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த சொகுசு காரை சோதனை செய்தபோது அதில் பல நிறுவனங்களின் போலி ஐடி கார்டுகள் கிடைத்துள்ளது. அதில் வழக்கறிஞர் ஐடி கார்டு, கத்தி மற்றும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்ததுள்ளது.
பின்னர் இதனை கைப்பற்றிய போலீசார், அவர்கள் மீது ஐந்து பிரிவுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புளியங்குடி பகுதிகளில் போலி செய்தியாளர் என கூறி பணம் பறிக்கும் கும்பலை கைது செய்யப்பட்டது, செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் போலியான செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்த பத்திரிகையாளர்கள், துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு தங்களது நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்