தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போவது வழக்கமாக இருந்தது. குறிப்பாக திருமண விழாவுக்கு வரும் வாகனங்களே அதிக அளவில் காணாமல் போவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர், ஒருவர் திருடு போன வாகனத்தின் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி வருவது தெரியவந்தது. இதைத்த தொடர்ந்து நேற்று(நவ.29) மாலையில் சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருடு போன இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தார். பின்னர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்த ஜோதிமுத்து என் சங்கரன்கோவில் மற்றும் சிவகாசி ஆகிய பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் ராஜபாளையம், வன்னியம்பட்டி, கழுகுமலை ஆகிய பகுதிகளில் இருந்து திருடிய 11 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர் திருடிய அனைத்து இருசக்கர வாகனங்களும் ஒரே ரகத்தினை சேர்ந்தது என்று அறிந்த காவலர்கள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பைக்குகள் திருடிய மூவர் கைது: 33 வாகனங்கள் பறிமுதல்!