தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்த வண்ணம் உள்ளது. தகவலின்பேரில் ரோந்துப் பணியில் செல்லும் காவல் துறையினர், மணல் திருட்டில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். அவர்கள் உபயோகிக்கும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மணல் திருட்டு சம்பந்தமாக தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இத்தகைய மணல் திருடர்கள் குறித்த தகவலை 8610791002 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் காவல் துறைக்குத் தெரிவிக்கலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.