தென்காசி: பருவ மழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்காசியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (நவ.6) இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகளில் மழைநீர்: குறிப்பாக, நான்குமுக்கு சாலையில் தண்ணீர் அதிகமாக ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மழையின் காரணமாக மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் நீரில் மூழ்கி காணப்பட்டன. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதிப்புகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: 1.25 லட்சம் லிட்டர் தண்ணீரை நந்தனம் கால்வாயில் திருப்பி விட திட்டம்!
அதிகரித்து வரும் பாதிப்புகள்: கடையநல்லூர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தென்காசி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் ஏற்கனவே பாதிப்படைந்து இருந்த நிலையில், மழையின் தாக்கத்தால் தற்போது முழுவதுமாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. குற்றாலம் பகுதிகளில் பெய்த கனமழையால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகமாக ஏற்பட்டு, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. எனவே, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்!