தென்காசி மாவட்டத்தின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான குற்றாலம், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சில நாள்களாக ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை, விவசாய நிலங்களை நாசப்படுத்தி வந்த நிலையில் அதனை வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் பேரில் இரு தினங்களுக்கு முன்னர் யானையை வனப்பகுதிக்கு விரட்டச் சென்ற வேட்டை தடுப்புக் காவலர் முத்துராஜ் என்பவரை யானை மிதித்துக் கொன்றது. நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு யானையிடமிருந்து காவலர் உடலை வனத்துறையினர் மீட்டனர்.
இந்நிலையில், மீண்டும் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் அமைந்துள்ள பழத்தோட்டம் பகுதியில் அந்த யானை சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் யானை ஊர்பகுதிகளில் நுழையாதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், யானையை வனப்பகுதிக்கு விரட்டவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.