தென்காசி: தென்காசி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் மன்றத் தலைவர் சாதிர் தலைமையில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் மன்றப் பொருட்கள் வாசிக்கப்பட்டது. இதனிடையே நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வீட்டுத் தீர்வை வசூல் செய்வதில் வருவாய் ஆய்வாளர் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் அதிக அளவு லஞ்சம் வாங்குவதைச் சுட்டிக்காட்டும் விதமாக, 10வது வார்டு கவுன்சிலர் ராசப்பா, தான் கொண்டு வந்திருந்த வாளியிலிருந்து போலி ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதிகாரிகளுக்கு முன் தனது மேல் போட்டுக்கொண்டு, பண மழையில் குளிப்பது போல் செய்து தனது எதிர்ப்பை நூதன முறையில் பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து லஞ்சப் பண மழையில் வருவாய் அலுவலர் குளித்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இவ்வாறு அதிகாரிகள் முன்னிலையில் பண மழையில் குளித்து தனது எதிர்ப்பை தெரிவித்த முறை தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களின் கண்டனங்களால் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரம் தென்காசி மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய நிறுவன கூட்டங்களில் அவ்வப்போது மோதல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன தென்காசி கலெக்டருக்கு - கண்டித்த விவசாயிகள்