தென்காசி மாவட்டம் ராயகிரி பகுதியைச் சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். இவர் ராயகிரி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா அலையின்போது ராமகிருஷ்ணன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமம் அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, அவரது மகள் அவருக்கு உறுதுணையாக இருந்து உதவியுள்ளார். மேலும், தனது கரோனா பாதிப்பு காலகட்டத்தில் சாதி, மத வேற்றுமையின்றி அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதைப் பார்த்து ராமகிருஷ்ணன் பிரமித்துள்ளார். குறிப்பாக, கரோனா காலகட்டத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் கூலித் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே, பல தொழில் அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனிதநேயத்தோடு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் வழங்கி உதவி செய்தனர்.
இதைக் கேள்விப்பட்ட ராமகிருஷ்ணன், தாமும் தனது பங்கிற்கு கஷ்டப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். மேலும், தான் தேநீர் கடை நடத்தி வருவதால் தன்னால் அரிசி, மளிகை சாமான்கள் வழங்க முடியாது என்பதை உணர்ந்த ராமகிருஷ்ணன், தனது கடையில் தூய்மைப் பணியாளர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பிறகு ராமகிருஷ்ணன் தனது தேநீர் கடையில் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு, அவசர ஊர்தி பணியாளர்களுக்கு டீ இலவசமாக வழங்கத் தொடங்கினார். இதை அறிந்த தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் ராமகிருஷ்ணன் டீ கடைக்குச் சென்று, டீ குடித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் கரோனா தொற்று குறைந்தபோதும் ராமகிருஷ்ணன் இந்த சேவையை நிறுத்திக் கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக டீ வழங்க முடிவெடுத்தார். அதன்படி, தற்போது கடையின் முன் பகுதியில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இலவசம், தூய்மைப் பணியாளர்கள், அவசர ஊர்தி பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு டீ இலவசம் என வாசகம் எழுதப்பட்ட பேனரை வைத்துள்ளார்.
எனவே, ராயகிரி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் தினமும் ராமகிருஷ்ணன் டீ கடைக்குச் சென்று தவறாமல் இலவசமாக டீ அருந்தி வருகின்றனர். அவர்கள் பணம் கொடுக்க முன் வந்தாலும் கூட, ராமகிருஷ்ணன் வாங்குவதில்லை. மேலும், நாள்தோறும் சென்றாலும் கூட முகம் சுளிக்காமல் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இலவசமாக டீ வழங்குகிறார்.
குறிப்பாக, கரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் தான் கடவுளாகப் பார்க்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவால் ஒட்டுமொத்த மக்களும் வீட்டில் முடங்கிய நிலையில் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே களத்தில் பணியாற்றி மக்களைப் பாதுகாக்கும் அற்புதப் பணியில் ஈடுபட்டனர். எனவே, அது போன்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இலவசமாக டீ வழங்குகிறார்.
அது தவிர, பேருந்து நிலையம் முன்பதால் இங்கு பேருந்து ஏற வரும் கர்ப்பிணிகள், ராமகிருஷ்ணன் டீக்கடைக்குச் சென்று பால் கேட்டால், அவர் இலவசமாகப் பால் வழங்குகிறார். அதேபோல் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுக்கிறார். ராமகிருஷ்ணனின் இந்த செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 பேர் முதல் 20 பேர் வரை ராமகிருஷ்ணன் டீக்கடையில் இலவசமாக டீ குடித்துச் செல்கின்றனர்.
இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாயும் மாதம் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை ராமகிருஷ்ணனுக்கு வருமானத்தில் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
இதுகுறித்து ராமகிருஷ்ணனிடம் நாம் பேசும்போது, “கரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டேன். அப்போது களத்தில் பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு பெரிய பெரிய அரசியல்வாதிகள் அரிசி, பருப்பு வழங்கினர். நான் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதால் இலவசமாக அவர்களுக்கு டீ வழங்கி வந்தேன்.
நாளடைவில் கடைசி வரை தூய்மைப் பணியாளர்கள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டீ வழங்க முடிவு செய்து, அந்த சேவையை செய்து வருகிறேன். இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அது எனக்குப் பெரிதாக தெரியவில்லை. கடைசி வரை, இந்த சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர் ஞானேந்திரன் கூறுகையில், “நான் ராயகிரி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிகிறேன். எங்கள் பேரூராட்சியில் 30 தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் எப்போது வந்து டீ கேட்டாலும் இலவசமாக டீ கொடுப்பார். ஒரு முறை கூட அவர் எங்களிடம் முகம் சுளித்தது இல்லை” என்று தெரிவித்தார்.
சரியான சில்லறையை கொடுக்காமல் டீ கொடுத்தால் கூட முகம் சுளித்துக்கொள்ளும் டீ கடைக்காரர்களுக்கு மத்தியில் ராமகிருஷ்ணன் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டீ வழங்கி வரும் சம்பவம் பாராட்டுக்குரியதே.
இதையும் படிங்க: 100 வேலை திட்டத்தில் குளறுபடியா? - உங்கள் பகுதியில் யாருக்கு போன் பண்ணனும்?