தென்காசி: குற்றால சீசன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில், தற்போது தினசரி சாரல் உடன் மழை பெய்து வருவதால் குற்றாலம் தற்போது மேலும் களைகட்டி வருகிறது. குற்றால சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும், தற்போது வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
குற்றாலத்திற்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி சுற்றுலாப் பயணிகள் வருவதால் இங்கு உள்ள அதிகப்படியான ஹோட்டலில் உணவு உண்ணுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இங்குள்ள ஹோட்டல்களில் முறையான உணவுகள் இல்லாததால் கெட்டுப்போன சிக்கன், மட்டன் உள்ளிட்ட பொருள்களை வைத்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அந்த பகுதி முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குற்றாலத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபலமான தனியார் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Tenkasi: கடையம் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக கசிந்த தண்ணீர்!
குற்றாலத்தில் உள்ள பேருந்து நிலையம் மேல்புறம் செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் மற்றும் நேற்று விற்பனையாகாமல் சாப்பிடுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சிக்கன், பழைய மட்டன் உள்ளிட்டவைகளும், கெட்டுப்போன நிலையில் 35 கிலோ சிக்கன் போன்றவை இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் நூடுல்ஸ், பிரைடு ரைஸ் ஆகியவை 15 கிலோ, சால்னா உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 50 கிலோ கெட்டுப்போன உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் பினாயில் ஊற்றி அழித்தார். பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அங்கு இருந்ததைக் கண்டு அதையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, ஹோட்டலுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் இது போன்ற சோதனைகள் அனைத்து ஹோட்டல்களிலும் நடைபெறும் என வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு வாதம்!