தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (25). இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் (52) என்பவரது மகள் சுகந்தியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் முருகன் தினமும் மது அருந்திவிட்டு, சுகந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாரியம்மாளுக்கும், முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியாரின் தலையில் வெட்டியுள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த மாரியம்மாளை அருகிலிருந்தவர்கள், சுரண்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முருகனை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தகராறில் மாமியார் என்றும் பாராமல்; மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!