தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வெகுவாக உயர்ந்து வருகின்றன. நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் கிராமப் பகுதியில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நீர் ஆதாரமாகக் கொண்டுதான் 470 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, பெரியகுளம் கண்மாய் கரையோர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், அதீத மழையின் காரணமாக கண்மாயின் தண்ணீர் அளவு வெகுவாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கண்மாயின் கரை உடைந்து விடும் அபாயத்தில் உள்ளது. ஆகவே, அக்கண்மாயை சீரமைக்க நடைவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பெய்த கனமழையால், பள்ளிகளிலும், வயல்வெளியிலும் அதிகப்படியான மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், தென்காசி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்காசி அருகே 22 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் சுப்பிரமணியபுரம்.. பொதுமக்கள் போராட்டம்!