உலக ஓய்வூதியர் தினமான இன்று (அக். 1) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில, பொதுத் துறை ஓய்வூதிய அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை போதிய முன்னேற்பாடு செய்யாமல் தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை அமல்படுத்தியுள்ளது. இதனால், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதனைச் சரிசெய்து விரைந்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், முடக்கிவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஓய்வூதியர்களுக்கு ரொக்கமாக வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.