தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கொலை முயற்சி வழக்கில் சாகுல் ஹமீதை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் தென்காசி பச்சநாயக்கன்பொத்தை பகுதிக்குச் சென்ற சாகுல் ஹமீது, அப்பகுதி தன்வசமாக்கி உள்ளதாகவும், இங்கு யாரும் வரக்கூடாது எனவும் பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பீர் முகம்மது என்பவர் ஆடு மேய்க்கச் சென்றபோது அவரை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பீர் முகம்துவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்காசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், காவல் துறைக்கு பயந்த சாகுல் ஹமீது, அப்பகுதியிலுள்ள ஆழமான குளத்திற்குள் சென்று மறைந்துகொண்டார். சாகுல் ஹமீதை காவல் துறையினர் ஊர் முழுவதும் தேடி வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் காவல் துறையினரிடம் ஒரு தகவல் தெரிவித்தனர். அதில், தாங்கள் குளத்தின் அருகே சென்றபோது அங்கிருந்த ஒருவர் தங்களை மிரட்டியதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட காவல் துறையினர், சாகுல் ஹமீது குளத்திற்குள் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர். ஆனால், குளத்திற்குள் இறங்கி குற்றவாளியை தேடுவது சிரமம் என்பதால் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
குளத்திற்குள் இருந்த சாகுல் ஹமீது தண்ணீரோடு தண்ணீராக அங்கேயும், இங்கேயும் நீந்தியுள்ளார். அப்போது திடீரென அவரது தலையின் மேலே ஏதோ சத்தம் கேட்க, மேலே பார்த்தபோது, காவல் துறையினரால் இயக்கப்பட்ட ‘ட்ரோன் கேமரா’ அவரை காட்டிக்கொடுத்தது.
பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். குளத்திற்குள் இறங்க முடியாத சூழலில் காவல் துறையினரின் இந்த புத்திசாலித்தனத்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: '4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 5 ஆண்டு சிறை