தென்காசி: அச்சன்புதூர் அருகேவுள்ள மேக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் கனி - ஜைத்தூன் பீவி தம்பதி. இவர்களது மூத்த மகன் காசிர் அலி (26) தனது மனைவி அசன் பீவி (19) என்பவருடன் மேக்கரை பகுதியில் அடவிநயினார் கோயில் அணைக்குச் செல்லும் வழியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகையன்று காசீர் அலிக்கும் அவரது மனைவி அசன் பீவி (19) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசன் பீவி, தென்காசியிலுள்ள அவரது தந்தை வீட்டிற்குச் சென்றார்.
இதற்கிடையே வழக்கம்போல, நேற்று முன்தினம் (ஜூலை 12) இரவு வீட்டில் காசீர் அலியும், எதிர் வீட்டில் அவரது பாட்டி சைத்துன் பீவியும் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர், கணவருடன் கோபித்து கொண்டு தந்தையாரின் வீட்டிற்கு சென்ற அசன் பீவி, தனது தந்தையோடு மறுநாள் கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் காசீர் அலியையும், அவரது பாட்டி அசன் பீவியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிப்பட்டது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து குற்றவாளிகளைப் பிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக பேசிய ஹெச்எம்... போனை உடைத்து அட்டகாசம்...