தென்காசி: நியுமோகோக்கல் நிமோனியா எனும் பாக்டீரியா குழந்தைகளைப் பெரும்பாலும் பாதிக்கும் ஒருவித தொற்று நோய் ஆகும். இதிலிருந்து அவர்களைக் காக்க தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி, தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (ஜூலை 23) குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.
இதில் ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மூன்று தவணையாக செலுத்தப்படும் 12 ஆயிரம் மதிப்புள்ள தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வாரந்தோறும் புதன்கிழமை செலுத்தப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பு ஊசி செலுத்தி பயன்பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு மருத்துவர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி வழங்கக்கோரி உடையாம்பாளையம் கிராமத்தினர் சாலை மறியல்