தென்காசி: குணராமநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டது, கடப்போகாத்தி கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தின் வழியாக மேலப்பாவூர் வரையில் செல்லும் தார் சாலை கடந்த 10ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருசக்கர வாகனங்கள்கூட இயக்க முடியாத நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகம், கீழப்பாவூர் யூனியன் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் எனப் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களை கொடுத்தும் சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை கிராம மக்கள் கடப்போகாத்தி கிராமத்தின் சாலையில் கற்களை வைத்து, மறித்து சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் குற்றாலம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வந்து உத்தரவாதம் தரும் வரையில் போராட்டம் தொடரும் எனக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் சிறிது நேரத்தில் உரிய அலுவலர்கள் வந்து, உத்தரவாதம் கொடுத்ததின்பேரில், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: விரைவில் தூத்துக்குடியில் ரூ.131 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை - அமைச்சர் கீதா ஜீவன்