தென்காசி மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை பெய்யாததால் கார் மற்றும் பிசான சாகுபடி மேற்கொள்ளாமல் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அதேசமயம் இந்த ஆண்டு பெய்த பருவ மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறை இன்றி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வகையில், 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு, ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வடகரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல், அறுவடை பணிகள் முடிந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 600 முதல் 700 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், அதனை ஆயிரம் மூட்டைகளாக உயர்த்த வேண்டும் . ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுவதால் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அறுவடை முடித்து கொண்டு வரும் நெல் மூட்டைகளை வீதிகளில் கொட்டி இரவு பகலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொய் குற்றச்சாட்டு சுமத்திய ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ