தஞ்சாவூர்: மதமாற்ற சர்ச்சையில் திருபுவனம் ராமலிங்கம் 2019ல் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் தேடப்படும் குற்றவாளிகளாக ஐந்து பேரை அறிவித்தனர். ஐந்து குற்றவாளிகளில் ஒருவராக கும்பகோணம் மேலக்காவேரி ESM நகரைச் சார்ந்த அப்துல் மஜீத் என்பவர் இருக்கிறார். இவரது மனைவி நஸ்ரத் பேகம் எஸ்டிபிஐ-யின் தஞ்சை மாவட்ட மகளிர் அமைப்பாளராக உள்ளார். இவர் ஆசிரியைப் பணி புரிந்துகொண்டு, மத பிரசாரமும் செய்து வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர், ராமலிங்கம். இவர் திருபுவனம் முன்னால் பாமக செயலாளராக இருந்தார். இந்நிலையில், மதமாற்ற பரப்புரையை தடுத்ததாகக் கூறி 2019இல் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்குத் தொடர்பாக, திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 11 பேரை கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையிலேயே 2019ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு ராமலிங்கம் கொலை வழக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே நெல்லை மாவட்டம், தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகமது சாலிக் என்பவரை, தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் அதே ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து 2019 ஜூலை 3ஆம் தேதி அன்று தென்காசியில் உள்ள அகமது சாலிக்கின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், தொடர்பான விபரங்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த நிலையில், பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சேதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், ராஜகிரி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் காலை முதல் அதிகாரிகள் சேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம், மேலக்காவேரி ESM நகர் உள்ள அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியைச் சேர்ந்த முகமது பாருக் ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழ்நாட்டில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை!