தென்காசி: நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், பல்வேறு கோயில்கள் மற்றும் தொழில்கள் செய்யும் பகுதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் பண்பாட்டை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பூஜை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன.
அதன்படி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 3 முதல் 30 வயது வரையிலான பரதநாட்டியக் கலைகளைக் கற்றுக் கொள்ளும் 55 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நக்ஷ்த்ரா பரதநாட்டிய மையத்தின் ஒருங்கிணைப்பில், நவராத்திரி பூஜைகள் கொண்டாடப்படும். சுமார் 9 நாட்களும் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுs சிறப்புமிக்க 9 கோயிலுக்குச் சென்று, அங்கு தாங்கள் கற்ற பரதக் கலையை பறைசாற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பரிசுகளை வென்றுள்ளனர்.
அந்த வரிசையில், நவராத்திரி பூஜைகளின் முதல் தினத்தன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலிலும், இரண்டாவது நாள் தாம்பரம் செல்லியம்மன் கோயிலிலும், மூன்றாவது நாள் திருவெற்றியூர் வாடி உடையம்மன் கோயிலிலும், நான்காவது நாள் மணிமங்கலம் சிவன் கோயிலிலும், ஐந்தாவது நாள் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், தொடர்ந்து ஆறாவது நாள் மேட்டுப்பாளையம் தென்திருப்பதி கோயிலிலும், ஏழாவது நாள் ஆலங்குளம் ராமர் மலை கோயிலிலும், எட்டாவது நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், ஒன்பதாவது நாள் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலிலும் நவராத்திரி பூஜைகளை செய்து, பரத கலையை பல்வேறு முகபாவனைகளுடன் மாணவிகள் வெளிப்படுத்தி உள்ளனர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் கண்டனர்.
இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் 11 அம்மன் சப்பர பவனி கோலாகலம்!