தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது; 'கரோனா விவகாரத்தில் திறமையில்லாமல் மத்திய, மாநில அரசுகள் கையாளுகிறார்கள். தகுந்த இடைவெளி மூலமாகத்தான், இந்த கரோனாவை ஒழிக்க முடியும் என்று உலக அறிஞர்கள் கூறுவதால், இவர்கள் முழு அடைப்பை அறிவித்தார்கள். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அறிந்து முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை.
புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர அல்லது அழைத்துச் செல்ல சரியான நடவடிக்கை இல்லை. திறமையும் இல்லாமல் மனதும் இல்லாமல் எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள்.
மேலும் அனைத்துக் கட்சியையும் கூட்டி அனைவரின் கருத்துகளையும் கேட்டு செயல்பட மனமில்லை. ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது குறித்த தகவல்கள் பற்றி எனக்குத் தெரியாது. அப்படி நீட்டிக்கப்பட்டால் நீட்டிப்பதற்கு முன்னால் மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் போடவேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது' என்றார்.
நிவாரணப் பொருட்கள் வாங்க காத்திருந்த தூய்மைப் பணியாளர்களிடம் காய்ச்சல் எதுவும் இருக்கிறதா என்று விசாரித்த பிறகே, அவர்களை கார்த்தி சிதம்பரம் அருகில் அழைத்துப் பொருட்கள் வழங்கினார். இச்செயல் அங்கிருப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இதையும் படிங்க: பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது!