தென்காசி: கேராளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மேலும் இரண்டு பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த 160க்கும் மேற்பட்டோர் தற்போது கேரளாவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான புளியரை பகுதியில் தற்போது சுகாதாரத் துறையினர் சார்பில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களுக்கும் உடல் வெப்பநிலையை சோதனை செய்த பிறகே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான புளியரை பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு புளியரை பகுதியில் சுகாதாரத் துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு பணிகளை கண்காணித்தார்.
தொடர்ந்து, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த கேரளா அரசு பேருந்தை மறித்து அதனுள் சென்று மாவட்ட ஆட்சியர் சுகாதார பணியாளர்களை வைத்து சோதனை மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும், அதில் வரும் மக்களையும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்க வேண்டுமென சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இறந்த உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற உறவினர்கள் - ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் நேர்ந்த அவலம்.!