தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் வீட்டைச் சுற்றி மழை நீர் புகுந்ததால் வெளியேற வர முடியாமல் சிக்கிக்கொண்ட மாற்றுத்திறனாளி பெண்ணை துரிதமாகச் செயல்பட்டுத் தீயணைப்புத் துறையினர் மீட்டது பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்று (டிச.19) தென்காசி மாவட்டம் முழுவதும் அதிகாலையிலிருந்தே கன மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இயல்பு நிலை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து, தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை நிற்காமல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடம் தாலுகா, குருவிகுளம் ஒன்றியம் ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், மாற்றுத்திறனாளி பெண்ணான துரைச்சி (42) என்பவரது வீட்டில் நான்கு பக்கமும் மழை நீரானது சூழ்ந்தது. இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி பெண் சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலக உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரியுள்ளார்.
இதையடுத்து, சட்டமன்ற அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் தீயணைப்பு மீட்புப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டிலிருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்தப்பெண் கிராம அலுவலக பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் துரிதமாகச் செயல்பட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை பத்திரமாக மீட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் தீயணைப்பு மீட்புப்படையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், சங்கரன்கோவில் பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், தொடர் மழையால் பாதிப்படைந்த பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் ரயிலில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி!