தென்காசி: வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் நெல் நடுவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகப் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் மழை காரணமாகத் தென்காசி மாவட்டத்தின் முக்கிய அணைகளான கடனா அணையின் நீர்மட்டம் 75 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 78 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 67.59 அடியாகவும் அதிகரித்துள்ளது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து அதிகப்படியான மழை பெய்வதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களைப் பக்குவப்படுத்தும் பணியிலும், விவசாயப் பணியிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே சாணியடி திருவிழா.. பக்தர்கள் மீது சாணத்தை வீசி உற்சாக கொண்டாட்டம்!
தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் நெல் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் விவசாயிகள் கடலை உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், இம்மாவட்டத்தின் பயிர் சாகுபடியில் அதிக உற்பத்தி கிடைக்கும் பருவமாகப் பிசான சாகுபடி இருந்து வருகிறது. மேலும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் தென்காசி மாவட்டத்தில் அதிகப்படியாகக் கனமழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இதனால், கிணற்றிற்கும் நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து பிசான சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். செங்கோட்டை, வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், சிவகிரி, சுரண்டை, ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.